VIDEO: ‘தலையை பதம் பார்த்த பவுன்சர்’!.. ஸ்ட்ரெட்சரில் அழைத்துச் செல்லப்பட்ட வீரர்.. PSL தொடரில் நடந்த அதிர்ச்சி.. KKR அணிக்கு வந்த சிக்கல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் தலையில் பந்து பலமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற PSL தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் எஞ்சிய போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 133 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடியது.

அதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தார். அவர் 36 பந்துகளில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்விளைவாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல், 6-வது வீரராக களமிறங்கினார். அப்போது இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது மூசா வீசிய 14-வது ஓவரை ரசல் எதிர்கொண்டார். அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசல் மிரட்டினார்.

இதனால் அடுத்த பந்தை பவுன்சராக முகமது மூசா வீச, அது ரசலின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் அவர் நிலைகுலைந்து போனார். இதற்கு அடுத்த பந்தே ரசல் அவுட்டாகினார். ஆனால் பந்து ஹெல்மெட்டில் பட்டு முகத்தின் ஒரு பகுதியில் கடுமையாக தாக்கியது. இதனால் மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெட்சரில் ரசல் அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து 2-வது இன்னிங்ஸில் ரசலுக்கு பதில் கன்கஷன் மாற்று வீரராக நசீம் ஷா விளையாடினார்.

ஆண்ட்ரே ரசல், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காராக ரசல் இருந்து வருகிறார். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், எஞ்சிய ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படும் நிலையில், PSL தொடரில் விளையாடிய ரசலுக்கு காயம் ஏற்பட்டது, அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்