‘சிஎஸ்கே வீரர் சொன்ன அதே காரணம்’!.. திடீரென விலகிய முக்கிய வீரர்.. ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணியில் இருந்து மீண்டும் ஒரு வீரர் பாதியிலேயே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகின்றன. அதேபோல் கிரிக்கெட் வீரர்களும் பயோ பபுலில் (Bio-secure bubble) இருந்து விளையாடி வருகின்றனர். இதுவரை 13 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இதில் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 2 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். இவர் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க தொடருக்காக பயோ பபுலில் இருந்து விளையாடினார். இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பேஸ் டி20 லீக்கில் 2 மாதம், இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடினார்.

கடந்த ஒரு ஆண்டாக பயோ பபுலில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய லியாம் லிவிங்ஸ்டன், இதுதொடர்பாக ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த அணி நிர்வாகமும் இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர் நாடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், ‘பயோ பபுலில் ஒரு ஆண்டாக இருந்த காரணத்தால், லியாம் லிவிங்ஸ்டன் நேற்று இரவு வீடு திரும்பிவிட்டார். அவருடைய இந்த முடிவை புரிந்துகொண்டு நாங்கள் மதிக்கிறோம். தொடர்ந்து எங்களுடைய ஆதரவை அவருக்கு கொடுப்போம்’ என ராஜஸ்தான் அணி பதிவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸிக்கு (Ben Stokes) கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், குறைந்தது 12 மாதங்கள் ஓய்வு தேவை என்பதால், அவர் சமீபத்தில் நாடு திரும்பினார். அப்போது மறைந்த அவரது தந்தையின் பெயர் பதித்த ராஜஸ்தான் ஜெர்சியை, பென் ஸ்டோக்ஸுக்கு பரிசாக கொடுத்து பிரியாவிடை செய்தனர்.

அதேபோல் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்சரும் (Jofra Archer) காயம் காரணமாக ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விலகுவது ராஜஸ்தான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே காரணத்தை குறிப்பிட்டுதான், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். நீண்ட நாட்களாக பயோ பபுலில் இருப்பதாகவும், குடும்பத்துக்கு நேரம் செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் வரும் டி20 உலகக்கோப்பைக்கு தயாரக இருப்பதாகவும் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்து நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்