"'அம்பையர்' செஞ்ச காரியத்தால.. 'ரோஹித்' செமயா கடுப்பாகிட்டாரு.." முதல் ஓவரிலேயே நடந்த 'சர்ச்சை' சம்பவம்.. பரபரப்பு 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு சாம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் ஆடி ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ரோஹித் ஷர்மா 63 ரன்களும், சூர்யகுமார் 33 ரங்களும் எடுத்திருந்த நிலையில், மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில், மயங்க் அகர்வால் அவுட்டானதையடுத்து, கே எல் ராகுல் மற்றும் கெயில் ஆகியோர் நிதானமாக ஆடி, 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தனர். இந்த சீசனில், இதுவரை 5 போட்டிகள் ஆடியுள்ள மும்பை அணி, இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இந்த 5 போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், மும்பை அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும், பந்து வீச்சு சிறப்பாக அமைந்ததால் தான் வெற்றி பெற முடிந்தது.


இதனிடையே, பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) செய்த செயல் ஒன்று, சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை ரோஹித் ஷர்மா எதிர்கொண்ட நிலையில், அவரது பேட்டைத் தாண்டி, கீப்பர் ராகுல் கைக்குப் பந்து சென்றது. உடனடியாக, ராகுல் அவுட்டிற்கு அப்பீல் செய்ய, போட்டி நடுவர் ஷம்சுதீன் (Shamshuddin) உடனடியாக அவுட் கொடுத்தார்.

இதனைக் கண்டதும் கடுப்பான ரோஹித் ஷர்மா, டிஆர்எஸ் அப்பீல் செய்து கொண்டே, நடுவர் ஷம்சுதீனை நோக்கி, கையை உயர்த்திக் காட்டிய படி, அவரின் முடிவுக்கு எதிராக, ஏதோ கோபமாக கூறினார். இதனைத் தொடர்ந்து, டிஆர்எஸ் முடிவில் ரோஹித் அவுட்டில்லை என்பது உறுதியானது. அதற்கு பிறகும், ரோஹித் ஷர்மா சற்று கோபத்துடனே காணப்பட்டார்.

 

நடுவர் அவுட் கொடுத்த நிலையில், டிஆர்எஸ் மூலம் ரோஹித் அவுட்டிலிருந்து தப்பித்தாலும், நடுவரை நோக்கி கையை உயர்த்தி, ரோஹித் ஷர்மா தனது கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் இருக்கும் நடுவர் ஏதேனும் தவறான முடிவைக் கொடுத்தாலும், பதிலுக்கு இப்படி அவரிடம் தவறாக நடந்து கொள்வது என்பது ஏற்க முடியாத செயலாகும்.



ரோஹித்தின் இந்த நடவடிக்கையால், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்