அவர் இருக்கும்போது கோலிக்கு ‘பவுலிங்’ கொடுக்க காரணம் என்ன..? டாஸ் போடும்போதே ‘சூசகமாக’ ரோஹித் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் பயிற்சி ஆட்டம் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 41 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 17.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 60 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் விராட் கோலிக்கு (Virat Kohli) கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) கேப்டன் பொறுப்பை கவனித்துக் கொண்டார். இந்த சூழலில் திடீரென ஃபீல்டிங் செய்ய வந்த விராட் கோலியை பவுலிங் வீச ரோஹித் ஷர்மா அழைத்தார்.

அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தனர். இந்த சமயத்தில் விராட் கோலி பவுலிங் வீச வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர் வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்களால் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. அதனால் 2 ஓவர்களை வீசிய விராட் கோலி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) இருக்கும்போது திடீரென விராட் கோலிக்கு பவுலிங் கொடுக்க காரணம் என்ன? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதுகுறித்து டாஸ் போடும் போதே ரோஹித் ஷர்மா கூறியிருந்தார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்து வீசுவதற்கு தயாராகவில்லை. லீக் போட்டிகள் தொடங்கும் முன் தயாராகி விடுவார் என நினைக்கிறேன். இந்திய அணியில் 5 சிறந்த பவுலர்கள் உள்ளனர். ஆனாலும் 6-வதாக ஒரு பவுலரை வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் நான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மூவரில் யாராவது ஒருவர் பந்துவீசுவோம்’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன்பின்னர் பந்துவீசுவதை தவிர்த்து வந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யவில்லை. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் கூடுதல் பவுலர் இருப்பது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டே நேற்றைய போட்டியில் விராட் கோலியை பவுலிங் வீச வைத்து ரோஹித் ஷர்மா சோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்