ரோஹித் சதம் அடிச்சதுக்கு பின்னாடி இருக்கும் வலி.. மனுஷன் ‘வேறலெவல்’ தாங்க.. போட்டோவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, பீல்டிங் செய்ய வராததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்களை எடுத்து 99 ரன்களை முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 256 பந்துகளில் 127 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் புஜாராவும் அரைசதம் (61 ரன்கள்) அடித்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 44 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஜடேஜா 17 ரன்களிலும், ரஹானே டக் அவுட்டாகியும் அதிர்ச்சியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் (50 ரன்கள்) மற்றும் ஷர்துல் தாகூர் (60 ரன்கள்) ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் 25 ரன்களும், பும்ரா 24 ரன்களும் எடுத்தனர். இதனால் 10 விக்கெட் இழப்புக்கு 466 ரன்களை இந்தியா குவித்தது. தற்போது 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா பீல்டிங் செய்ய வரவில்லை. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அவரது காலை நோக்கி வீசியதால், அவர் தொடைப் பகுதி சிவந்து காயமடைந்துள்ளது. காயத்துடனே தொடர்ந்து விளையாடியதால், வலி அதிகமாகவே அவர் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் புஜாராவுக்கும் பேட்டிங் செய்யும் போது காலில் அடிபட்டதால், அவரும் பீல்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்