'சிஎஸ்கே' டீம்'ல மட்டும் அந்த ஒரு 'விஷயம்' நடந்துச்சு... நான் சும்மா 'பட்டைய' கெளப்புவேன்..." விருப்பத்துடன் கேட்ட 'உத்தப்பா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன், ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, சாய் கிஷோர் உள்ளிட்ட சில வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த ஏலத்தில், சென்னை அணி, மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை வாங்கியிருந்தது.

அதே போல, ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில், ராபின் உத்தப்பாவையும் சென்னை அணி எடுத்திருந்தது. கடந்த சீசனில், அதிக சீனியர் வீரர்களுடன் களமிறங்குவதாக, சென்னை அணி மீது விமர்சனம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டும் உத்தப்பா, புஜாரா, மொயீன் அலி போன்ற வீரர்களை எடுத்ததால் சென்னை அணி மீது மீண்டும் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் ராபின் உத்தப்பா, அதிரடியாக சில போட்டிகளில் ஆடி ரன் குவித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதனால், சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ள நிலையில், ஐபிஎல் குறித்து பேசிய உத்தப்பா, 'சென்னை அணிக்காக நான் ஓப்பனிங் ஆட வேண்டுமென விரும்புகிறேன். நான் ஒவ்வொரு முறையும் தொடக்க வீரராக களமிறங்கும் போது நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளேன். ஆனால், சமீப காலமாக நான் ஆடும் அணிகள், என்னை பொருந்தாத இடத்தில் களமிறக்க வைக்கும் போது தான், எனது ஆட்டம் சற்று மோசமாகிறது. நான் ஓப்பனிங் இறங்கினால் நிச்சயம் என்னால் வெற்றியை பெற்றுத் தர முடியும்' என அவர் கூறியுள்ளார்.

மேலும், தோனி குறித்து பேசிய உத்தப்பா, 'எம்.எஸ். தோனியுடன் எனக்கு நிறைய சிறந்த அனுபவங்கள் உண்டு. கடந்த 2004 ஆம் ஆண்டு, சேலஞ்ஜ் டிராபி கேம்பையனில் வைத்து நாங்கள் முதன் முதலில் சந்தித்துக் கொண்டோம்.


இந்திய அணிக்காக நாங்கள் இணைந்து ஆடியது முதல், தற்போது வரை சிறந்த நண்பர்களாக உள்ளோம். இருவரின் குடும்பத்தாரும் மிக நெருக்கமானவர்கள்' என உத்தப்பா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை அணியில் இருந்த தொடக்க வீரர் வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது இடத்தில் உத்தப்பாவை சென்னை அணி ஆட வைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்