VIDEO: ‘முதல் மேட்ச், அதுவும் தோனி கூட டாஸ் போட போனது..!’.. போட்டி முடிந்தபின் ‘குரு’ குறித்து ரிஷப் பந்த் சொன்ன உருக்கமான வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் கேப்டன் ரிஷப் பந்த், போட்டி முடிந்த பின் தோனி குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம்வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், மொயின் அலி 36 ரன்களும், சாம் கர்ரன் 34 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் டாம் கர்ரன் தலா 1விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்கினர். இந்த கூட்டணி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் ஷிகர் தவான் 85 ரன்களும், ப்ரித்வி ஷா 72 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த நிலையில் 18.4 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின், நீங்கள் சின்ன வயது முதலே ரசிகராக இருக்கும் தோனிக்கு எதிராக கேப்டனாக விளையாடிய அனுபவம் குறித்து கூறுங்கள் என ரிஷப் பந்திடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘முதல் போட்டியே சிஎஸ்கேவுக்கு எதிராக, தோனியுடன் டாஸ் போட சென்றது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அவர் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். எதுவாக இருந்தாலும் அவரிடம்தான் நான் பகிர்ந்துகொள்வேன்’ என பெருமையாக கூறினார்.

டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷ்ரயாஸ் ஐயருக்கு, சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். அதனால் அவருக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்