ரபாடா இருக்கும்போது ஏன் டாம் கர்ரனுக்கு கடைசி ஓவர் கொடுத்தீங்க..? சரமாரியாக எழுந்த கேள்வி.. ஒருவழியாக மவுனம் கலைத்த ரிஷப் பந்த்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரை டாம் கர்ரனுக்கு கொடுத்ததற்கான காரணத்தை ரிஷப் பந்த் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் முதல் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அப்போது டாம் கர்ரன் (Tom Curran) வீசிய 14-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ராபின் உத்தப்பா (63 ரன்கள்) அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகூர், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இவரைத் தொடர்ந்து அம்பட்டி ராயுடுவும் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. இதில் ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் (70 ரன்கள்) அவுட்டானார். ஆனாலும் அந்த ஓவரில் 11 ரன்களை சிஎஸ்கே வீரர்கள் அடித்தனர். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி வந்தது.

இந்த சூழலில் டெல்லி அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரபாடா (Rabada), கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டாம் கர்ரனை கடைசி ஓவர் வீச கேப்டன் ரிஷப் பந்த் அழைத்தார். ஆனால் அந்த ஓவரில் தோனி ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன்மூலம் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் ரிஷப் பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய ரிஷப் பந்த், டாம் கர்ரனுக்கு கடைசி ஓவர் கொடுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதில், ‘இந்த போட்டியில் தோல்வியடைந்தது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் இப்போது இருக்கும் மனநிலையை என்னால் விவரிக்க முடியவில்லை. இப்போட்டியில் பெற்ற தவறுகளை திருத்தி அடுத்த போட்டியில் பலமுடன் வருவோம்.

கடைசி ஓவரை டாம் கர்ரனுக்கு கொடுக்க காரணம் என்னவென்றால், இப்போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஒரு போட்டியில் எந்த வீரர் சிறப்பாக பந்துவீசுகிறாரோ அவரை தான் கடைசி ஓவரில் பயன்படுத்துவோம். அதனால்தான் டாம் கர்ரனுக்கு கடைசி ஓவரை வழங்கினேன். அவரும் சிறப்பாகதான் பந்து வீசினார், ஆனால் ரன்கள் சென்றுவிட்டன. இதுபோல் நடப்பது இயல்புதான், இந்த போட்டியில் நிறைய பாடங்களை கற்றுள்ளோம். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம்’ என ரிஷப் பந்த தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் ரபாடா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர் விளாசினார். இதனை அடுத்து ரபாடாவி வீசிய அடுத்தடுத்த ஓவர்களிலும் அடித்து ஆடவே ருதுராஜ் கெய்க்வாட் முயன்றார். அதேபோல் ஆவேஷ் கான் ஓவரில் ராபின் உத்தப்பா சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதில் டாம் கர்ரன் ஓவரில்தான் ஓரளவுக்கு ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர், மொயின் அலி என சிஎஸ்கே அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை டாம் கர்ரன் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்