VIDEO: ‘பாய் நம்பி கேளுங்க’!.. ரிஷப் பந்த் அவ்ளோ சொல்லியும் யோசித்து நின்ற கோலி.. முதல் டெஸ்ட்டில் நடந்த ருசிகரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியை ரிவியூ கேட்க வலியுறுத்திய ரிஷப் பந்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ஆட்டத்தின் ஆரம்பமே இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தினர். அதனால் இங்கிலாந்து வீரர்கள் ரன்கள் அடிக்க முடியாமல் திணறி வந்தனர். அதில் போட்டியின் முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விக்கெட் எடுத்து அசத்தினார்.

இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதனால் 183 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மட்டுமே 64 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் இளம் வீரர் சாம் கர்ரன் 8-வது வீரராக களமிறங்கி 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

இந்த நிலையில் கேப்டன் விராட் கோலியிடம் ரிவியூ கேட்குமாறு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வலியுறுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியின் 21-வது ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் பேடின் இடையே வேகமாக சீறிப்பாய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்து அவுட் கேட்டார்.

ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். உடனே கேப்டன் கோலி இது நிச்சயம் அவுட் என்று தானே முடிவு செய்து ரிவ்யூ கேட்டார். ஆனால் ரீபிளேவில் பந்து பேட்டில் படவில்லை என்றும், எல்பிடபிள்யூ ஆகவில்லை என்றும் தெரியவந்தது. இதனால் இந்தியா ஒரு ரிவியூவை இழந்தது.

இதனைத் தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் அதேபோல் பந்து செல்ல, இம்முறையும் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் அவுட் என்று அம்பயரிடம் அப்பீல் கேட்டார். ஆனால் மீண்டும் அம்பயர் நாட் அவுட் என்று தெரிவித்துவிட்டார். ஏற்கனவே ஒரு ரிவ்யூ வாய்ப்பை தவற விட்ட கோலி மறுபடியும் தவற விடக்கூடாது என்பதால் யோசித்தபடியே நின்று கொண்டிருந்தார்.

ஆனால் பந்து நிச்சயம் பேட்டில் பட்டது எனக் கூறி விராட் கோலியை ரிவியூ கேட்க சொல்ல ரிஷப் பந்த் வலியுறுத்தினார். இதன்பிறகு கோலியும் அவரை நம்பி ரிவ்யூ கேட்டார். முடிவில் பந்து பேட்டில் பட்டு தெளிவாக தெரிந்ததும், அம்பயர் அவுட் என அறிவித்தர். உடனே இந்திய வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். குறிப்பாக கேப்டன் கோலி ரிஷப் பந்தைப் பார்த்து கைத்தட்டி பாராட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்