‘வேறலெவல் ஐடியா’!.. முதல் மேட்சுக்கு நாங்க இப்படிதான் வர போறோம்.. ஆரம்பமே ‘அமர்களம்’ பண்ணும் ஆர்சிபி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆர்சிபி அணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் மீதி போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.

இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஒவ்வொரு வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் விமானம் மூலம் அமீரகம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரைக் காக்க மகத்தான சேவை செய்து வரும் முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக, PPE கிட் நிறமான நீல நிற ஜெர்சியுடன் விளையாட உள்ளதாக ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளதாக பெங்களூரு அணி தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்