இதை ஒருபோதும் பொறுத்துக்கவே மாட்டோம்.. ‘100% உங்க பக்கம்தான் இருக்கோம்’.. சர்ச்சையை கிளப்பிய சம்பவத்துக்கு RCB அணி அதிரடி ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டேனியல் கிறிஸ்டியன் மனைவியை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்ததற்கு பெங்களூரு அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது.

இது பெங்களூரு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் ஆர்சிபி அணியையும், வீரர்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் (Daniel Christian) மீது அதிகமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதற்கு காரணம், கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டேனியல் கிறிஸ்டியன் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்சர் உட்பட 22 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை பெங்களூரு அணியின் பக்கம் இருந்த ஆட்டம் கொல்கத்தாவின் பக்கம் சென்றது. இதனால் டேனியல் கிறிஸ்டியனை மட்டுமல்லாமல் அவரது கர்ப்பிணி மனைவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனால் நொந்துபோன டேனியல் கிறிஸ்டியன், ‘எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பாருங்கள். இன்று எங்களுக்கு மோசமான போட்டிதான், ஆனால் இது ஒரு விளையாட்டு. தயவுசெய்து என் மனைவியை தொந்தரவு செய்யாதீர்கள்’ என வருத்தமாக பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பவே, பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரசிகர்களின் செயலுக்கு பெங்களூரு அணியும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘நாங்கள் 100 சதவீதம் உங்கள் பக்கம் இருக்கிறோம் டேனியல் கிறிஸ்டியன். சமூக வலைதளங்களில் வீரர்களையும், அவர்களது உறவினர்களையும் அவதூறாக பேசுவதை ஒருபோதும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

வெற்றியோ, தோல்வியோ எல்லாம் இந்த அழகான விளையாட்டின் ஒரு பகுதி. நம் வீரர்கள் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தங்களது கடின உழைப்பை கொடுத்து இதுவரை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் மொத்த உழைப்பையும் அணியின் வெற்றிக்காகதான் கொடுத்துள்ளனர். ரசிகர்களாக இருங்கள், வெறியர்களாக இருக்க வேண்டாம்’ என ரசிகர்களுக்கு பெங்களூரு அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்