சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு..? கேள்விக்கு ‘நச்’ என்று அஸ்வின் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 78 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் அஸ்வின் விளையாடி உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியோடு சேர்த்து மொத்தம் 79 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 410 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 30 முறை 5 விக்கெட்டுகளையும், 7 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 4-வது வீரராக அஸ்வின் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும். அதேபோல் நானும் பலமுறை விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். ஆனால், அதைப் பற்றி எப்போதும் நான் யோசிப்பதே கிடையாது. நானும் ஒரு சாதாரண மனிதன்தான். எப்பொழுதும் புதிதாக முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னிடம் இருக்கிறது. ஒருவேளை எப்போது என் ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையோ அப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து விடுவேன்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறி வந்தது.

அப்போது அஸ்வின் வீசிய 35-வது ஓவரில் டாம் லாதம் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து டெவன் கான்வேயும் அவுட்டாகினார். இதனால் நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதற்கு அஸ்வின் எடுத்த முதல் விக்கெட்டே திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்