‘குரு vs சிஷ்யன்’!.. ‘ஸ்டம்ப் மைக்கை உன்னிப்பா கவனிங்க’.. ரவி சாஸ்திரி பதிவிட்ட ‘வைரல்’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி, ரிஷப் பந்த் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், மொயின் அலி 36 ரன்களும், சாம் கர்ரன் 34 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியைப் பொறுத்தவரை கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் டாம் கர்ரன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, 18.4 ஓவர்களில் 190 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 85 ரன்களும், ப்ரீத்வி ஷா 72 ரன்களும் அடித்து அசத்தினர்.

இந்த நிலையில் தோனி, ரிஷப் பந்த் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட் ஒன்று செய்துள்ளார். அதில், ‘குரு vs சிஷ்யன். இந்த போட்டி ரொம்ப வேடிக்கையாக இருக்கப் போகிறது. ஸ்டம்ப் மைக்கை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்’ என ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ளார்.

டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் ஓய்வில் இருப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரி்லிருந்து விலகினார். அதனால் அவருக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் டெல்லியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற பின் தோனி குறித்து ரிஷப் பந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘முதல் போட்டியே சிஎஸ்கேக்கு எதிராக, அதுவும் தோனியுடன் டாஸ் போட சென்ற நிகழ்வு, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார்’ என ரிஷப் பந்த் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்