‘கொரோனா பரவணும்னு இருந்தா அப்பவே வந்திருக்கும்’!.. மான்செஸ்டர் டெஸ்ட் சர்ச்சை.. முதல் முறையாக வாய் திறந்த ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்ட சர்ச்சை குறித்து ரவி சாஸ்திரி முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பிசியோ நிதின் படேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது.

இதுதொடர்பாக நடந்த ஆலோசனையை அடுத்து, இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் தொடர் முடியும் தருவாயில் இந்திய அணியால் போட்டி ரத்தானது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக லண்டனில் இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பங்கேற்றனர். பயோ பபுளில் உள்ள வீரர்கள் பொது நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இந்த விவகாரம் பிசிசிஐக்கு தெரிய வரவே, பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யார் அனுமதி கொடுத்தது? என ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இங்கிலாந்து முழுவதும் கட்டுப்பாடுகள் இல்லாமல் திறந்துதான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வேண்டும் என்று இருந்தால், முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஏற்பட்டிருக்கும்.

இந்தக் கோடை கால சீசன் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் சிறந்ததாக இருந்திருக்கும். கொரோனா காலமாக இருந்தாலும் கூட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கொரோனா காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் எந்த அணியும் இந்தியாவை போல் விளையாடியதில்லை. சந்தேகமென்றால் கிரிக்கெட் வல்லுநர்களை கேளுங்கள்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்