‘எதுவும் எளிதில் கிடைச்சிறாது.. அதுக்கு இதுதான் உதாரணம்’!.. ஒத்த ‘ட்வீட்’ போட்டு மொத்த ரசிகர்களின் அன்பை அள்ளிய ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. பல வருட போராட்டத்துக்கு பிறகு முதல்முறையாக ஐசிசி கோப்பையை நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

இதற்கு முன்பு வரை, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரை சென்று வெற்றி வாய்ப்பை நியூஸிலாந்து அணி நழுவ விட்டு வந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் பரிதாபமாக கோப்பையை தவறவிட்டது. அப்போட்டியில் கடைசி வரை போராடி டிரா செய்த நியூஸிலாந்து, அடுத்து நடந்த 2 சூப்பர் ஓவர்களிலும் டிரா செய்தது. ஆனாலும் ஐசிசி விதிகளின் படி இங்கிலாந்து அணி கோப்பையை தட்டிச் சென்றது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அப்படி இருக்கையில், ஐசிசி முதல்முறையாக நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூஸிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதை இந்திய ரசிகர்களும் கூட கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட வீரர்களும் நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியூஸிலாந்து அணியை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில், ‘இந்த சூழலில் சிறந்த அணி வெற்றிப் பெற்றுள்ளது. உலகக்கோப்பைக்கான நீண்டகால காத்திருப்புக்குப் பின், தகுதியான வெற்றியாளர்களாக நியூஸிலாந்து உருவெடுத்துள்ளது. மாபெரும் விஷயங்கள் எளிதில் கிடைத்துவிடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இது உள்ளது. நன்றாக விளையாடினார்கள். மரியாதை அளிக்கிறேன்’ என ரவி சாஸ்திரி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நியூஸிலாந்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்