"இப்போ எல்லாம் அத பத்தி கேட்டாலே.. எனக்கு 'சிரிப்பு' தான் வருது..." வெளிப்படையாக பேசிய 'அஸ்வின்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

மேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருந்த நிலையில், சில முக்கிய சாதனைகளையும் அவர் முறியடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, அஸ்வின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை அணியில் சேர்க்கவில்லை.

கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின், மிகவும் சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஆனாலும், டெஸ்ட் போட்டிகள் தவிர, குறைந்த ஓவர் போட்டிகளில் அஸ்வினை சேர்க்கவில்லை. கம்பீர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள், அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர், குறைந்த ஓவர் போட்டிகளில் இடம்பெறாமல் போவது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், டி 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் இடம்பெறாதது குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார். 'எப்போதும் நமக்கு நாமே போட்டியிட்டுக் கொள்ள வேண்டும். இப்போது நான் அதனை சரியாக செய்து கொண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனது அனுபவமும் வாழ்க்கையும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. அதே போல, பலரும் நான் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்காக அணியில் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

என்னைச் சுற்றி பல விவாதங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் எனக்கு நகைச்சுவையாக மட்டும் தான் இருக்கிறது. ஏனென்றால், இப்போதுள்ள சூழ்நிலையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் இப்போதுள்ள எனது வாழ்க்கையை மிகவும் நிம்மதியாக, ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை எனக்கு டி 20 அல்லது ஐம்பது ஓவர் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் எனது திறமையை நிரூபித்து மேட்ச் வின்னராக இருப்பேன்' என அஸ்வின் தெரிவித்துள்ளார். டி 20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அஸ்வின் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என இந்திய கேப்டன் விராட் கோலி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்