‘என் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்’... அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ‘ஓய்வு’... ரஞ்சி கோப்பை ‘லெஜண்ட்’ திடீர் அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் ரஞ்சி கோப்பை லெஜண்டுமான வாசிம் ஜாபர் சர்வதேச மற்றும் முதல்தர போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

முதல்தர போட்டிகளில் 1996-97 சீசனில் அறிமுகமான வாசிம் ஜாபர், இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணிக்காக இவர் 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 260 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 19,410 ரன்கள் குவித்துள்ளார். இதில் 57 சதங்களும், 91 அரை சதங்களும் அடங்கும். முதல்தரப் போட்டியில் இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 314 ஆகும்.

மேலும் 150 ரஞ்சி போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்ற இவர் கடந்த ரஞ்சி சீசனில் 1037 ரன்களைக் குவித்துள்ளார். விதர்பா அணிக்காக விளையாடிவந்த 41 வயதான இவர் ரஞ்சி கோப்பையில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாசிம் ஜாபர் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில் வாசிம் ஜாபர், “பள்ளி காலம் முதல் தற்போது வரையிலான அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி. என்மீது நம்பிக்கை வைத்த தேர்வு குழுவினருக்கும் நன்றி. என் தந்தை அவருடைய குழந்தைகளில் ஒருவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கண்ட கனவை நான் நிறைவேற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி. கிரிக்கெட் வாழ்வில் என்னுடைய முதல் இன்னிங்ஸ் தான் முடிவுக்கு வந்துள்ளது. பயிற்சியாளராக, வர்ணனையாளராக என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடரும். என்னால் முடிந்த வரை எனக்கு எல்லாமே கொடுத்த கிரிக்கெட்டுடன் இணைந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

CRICKET, WASIMJAFFER, RETIREMENT, RANJITROPHY, LEGEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்