மூணு வருசம் RCB-ல இருந்த இடமே தெரியல... ஆனா இன்னைக்கு இவர் லெவலே வேற.. ‘கொத்தாக தூக்கிய RR’.. இப்ப தான்யா உண்மையான IPL ஃபீவர் ஸ்டார்ட் ஆகிருக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக உலகின் நம்பர்.1 டி20 பந்துவீச்சாளரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது சீசன் ஐபிஎல் தொடர், வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் தொடரின் பாதியிலேயே நாடு திரும்பினர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஜோஸ் ஹசில்வுட், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறினார். அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் கொரோனா அச்சுறுத்தலால் தொடரின் பாதியில் விலகினர்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். அந்த அணியின் முக்கிய வீரரான ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக தொடரில் பங்கேற்கவில்லை. அதேபோல் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் காயத்தால் பாதியிலேயே நாடு திரும்பினார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் டையும் விலகினார்.

இதனால் பல போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் அந்த அணி தடுமாறியது. இப்படி இருக்கையில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என சமீபத்தில் கூறினார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அனைவரும் விலகியதால் ராஜஸ்தான் அணி பெரும் சிக்கலுக்கு ஆளானது.

அதனால் இந்த சரிவை சரிகட்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. இந்த நிலையில் உலகின் நம்பர்.1 டி20 பந்துவீச்சாளரான, தென் ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்ஸியை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. அதில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா அசத்தியது. இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய இடதுகை சுழற்பந்து வீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், ஆண்ட்ரு ரசல், நிக்கோலஸ் பூரன், ஹெட்மையர் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களை தனது சிறப்பான பந்துவீச்சால் திணறடித்தார்.

அந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். அடுத்த 4 டி20 போட்டிகளிலும் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அவர் கொடுக்கவில்லை. வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வீரராக தப்ரைஸ் ஷம்ஸி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஐபிஎல் தொடரில், 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக தப்ரைஸ் ஷம்ஸி விளையாடியுள்ளார். ஆனால் அந்த 3 ஆண்டுகளில் மொத்தமாக 4 போட்டிகளில் மட்டுமே அந்த அணிக்காக அவர் விளையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. ஆனால், தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் தற்போது உலகின் நம்பர்.1 டி20 பந்துவீச்சாளராக தப்ரைஸ் ஷம்ஸி உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், தப்ரைஸ் ஷம்ஸியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பயன்படுத்த தவறிட்டதாக ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ராஜஸ்தான் அணி இவரை ஒப்பந்தம் செய்தது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் தப்ரைஸ் ஷம்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்