‘இது கொஞ்சம் சவாலான விஷயம்தான்’!.. ஐபிஎல் ‘இந்த’ நாட்டுல நடத்த வாய்ப்பு இருக்கு.. ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன RR அணியின் உரிமையாளர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே ஊடகம் ஒன்றில் பேசிய ஐபிஎல் தலைவர், செப்டம்பர் மாதம் மீதமுள்ள ஐபிஎல் தொடர்களை நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார். அதேபோல், நாடு தற்போது இருக்கும் நிலையில், இந்தியாவில் போட்டிகளை நடத்துவது கஷ்டம் தான் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ஐக்கிர அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளுங்கள் என இலங்கை தெரிவித்தது. ஆனால் அந்நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கை பின்வாங்கியது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நடத்திய வீடியோ கான்ரன்ஸ் அழைப்பில் அதன் உரிமையாளர் மனோஜ் பத்லே கலந்துகொண்டு பேசினார். அப்போது மீண்டும் ஐபிஎல் தொடங்குவது குறித்து பேசிய அவர், ‘மறுபடியும் போட்டியை நடத்துவதற்கான இடம், தேதிகளை நிர்ணயிப்பது கடும் சவாலாக இருக்கும். ஏற்கனவே வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடி வருகின்றனர். காலண்டர்கள் நம்ப முடியாத அளவிற்கு நிரம்பியுள்ளன.

குறிப்பாக இந்த ஆண்டு COVID19-க்கு பிறகு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும், முடிந்தவரை பல கிரிக்கெட் தொடர்களை நடத்த முயன்று வருகின்றன. உண்மையை சொல்லவேண்டுமென்றால், இது சவாலாக இருக்கப் போகிறது. அதேசமயம் மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து அல்லது வேறு ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாடுகளில் நடத்த வாய்ப்புள்ளது’ என மனோஜ் பத்லே தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்