VIDEO: ‘என்ன தல இப்படி பண்ணிட்டீங்க..!’ சூர்யகுமார் யாதவால் செம ‘அப்செட்’ ஆன ராகுல் டிராவிட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது சூர்யகுமார் அவுட் ஆனதைப் பார்த்து ராகுல் டிராவிட் அதிருப்தி அடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் அலசங்கா மட்டுமே 44 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 123 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் அவுட்டானதைப் பார்த்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தி அடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம், இப்போட்டியின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அவுட்டானர். இதனை அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் 27 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் கூட்டணி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. அப்போது எதிர்பாராதவிதமாக கருணாரத்னே ஓவரில் தவான் அவுட்டாகினார். இதனால் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் சூர்யகுமார் இருந்தார். அப்போது 16-வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசியதன் மூலம் சூர்யகுமார் அரைசதம் அடித்தார்.

ஆனால் அடுத்த பந்தையும் அதேபோல் அடிக்க முயல, அதை மெண்டிஸ் கேட்ச் பிடித்தார். அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது சூர்யகுமார் அவுட்டானது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்