நல்லா போய்ட்டு இருந்த மேட்ச்.. ‘இப்டி’ ஆகும்னு எதிர்பார்க்கல.. குற்றவுணர்ச்சியில் ‘தலைகுனிந்த’ ஜடேஜா.. கொஞ்சமும் கோபப்படாம ‘ரஹானே’ செய்த செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவின் தவறால் ரன் அவுட்டான ரஹானே கோபப்படாமல் சாந்தமாக சென்ற விதம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3ம் நாளான இன்று கேப்டன் ரஹானே-ஜடேஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அப்போது ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு வேகமாக சிங்கிள் ஒன்றுக்கு ரஹானேவை அழைத்தார். இதில் எதிர்பாராதவிதமாக ரஹானே ரன் அவுட்டாகினார். 112 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை திணறடித்துக் கொண்டிருந்த ரஹனே ரன் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதனால் குற்றவுணர்ச்சியில் ஜடேஜா தலைகுனிந்து நின்றார். அப்போது ரஹானே எதுவுமே சொல்லாமல் போயிருந்தால், ஜடேஜா ஒருவித மோசமான மனநிலையிலேயே களத்தில் நின்றிருப்பார். அதனால் அவரை மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்தவைக்க, ‘பரவாயில்ல விடு’ என்ற வகையில் ஜடேஜாவை தட்டி ஊக்கப்படுத்திவிட்டு ரஹானே பெவிலியன் திரும்பினார். ரஹானேவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் தவறினால் விராட் கோலி ரன் அவுட் ஆனார். அப்போது கோலி சற்று கோபமடைந்தார். ஆனால் ரஹானே மாறாக ஜடேஜாவை அங்கேயே சமாதானப்படுத்தி, தொடர்ந்து சிறப்பாக விளையாடு என்ற ரீதியில் அவரைப் பார்த்து செய்கை செய்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதேபோல் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி ரஹானேவின் செயலை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தலைமைத்துவம் என்பது செயலில் உள்ளது என்பதை மீண்டும் ரஹானே நிரூபித்துள்ளார். தன் ரன் அவுட்டுக்கு அவரது எதிர்வினை அணிக்கு உண்மையான வீரர் என்பதாக இருந்தது’ என பாராட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்