‘எனக்கு ராகுல் டிராவிட்டை பார்த்தால் பயம்’!.. இந்திய அணியின் இளம் வீரர் ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோது அவரைக் கண்டால் பயப்படுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான ப்ரித்வி ஷா, Cricbuzz சேனலுக்கு அளித்த பேட்டியில் ராகுல் டிராவிட் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார். அவர் வீரர்களிடையே ஒழுக்கத்தை மிகவும் எதிர்பார்ப்பார். அதனால் அவரை கண்டால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும். அதேவேளையில் பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நட்புடன் பலகுவார். இரவு உணவை எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இந்தியாவின் கிரிக்கெட் லெஜண்ட்டின் அருகில் இருப்பதே பெருமிதமாக இருக்கும்’ என ப்ரீத்வி ஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ‘ராகுல் டிராவிட் உடன் இருப்பது ஒவ்வொரு இளைஞரின் கனவாக இருந்தது. அவர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் எந்தவொரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றவில்லை. வீரர்களின் இயல்பான ஆட்டத்தையே பின்பற்ற சொன்னார். பேட்டிங்கில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் மட்டுமே சொல்வார். ஒரு வீரரின் மனிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தே அவர் அதிகம் பேசுவார்.

போட்டியை அனுபவித்து விளையாட வேண்டும் என்பார். எதிரணியின் வியூகங்களை எப்படி கையாள வேண்டும், அதற்கு ஏற்ப எப்படி தயார் செய்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அதிகம் சொல்லிக் கொடுப்பார். அதேபோல் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர் மீதும் தனிப்பட்ட அக்கறையுடன் அவர் இருப்பார்’ என ப்ரீத்வி ஷா கூறியுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த 2018-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றது. அப்போது ப்ரீத்வி ஷா கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்