‘பேசாம புஜாராவை தூக்கிட்டு அவரை போடுங்க’!.. இளம் வீரரை ‘டிக்’ அடித்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவுக்கு பதிலாக இளம் வீரர் ஒருவரை களமிறக்கலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடியது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணின் தடுப்பாட்ட வீரர் என கருதப்படும் புஜாரா மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

அதேபோல் போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் விராட் கோலி, சீனியர் வீரர்கள் சிலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என புஜாரா மற்றும் ரோஹித் ஷர்மாவை மறைமுகமாக சாடினார். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்களும் மட்டுமே புஜாரா எடுத்தார்.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் புஜாராவுக்கு பதிலாக இளம் வீரர் ப்ரித்வி ஷாவை விளையாட வைக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் (Brad Hogg) கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘புஜாராவுக்கு பதிலாக ப்ரித்வி ஷாவை கொண்டு வரலாம். அவர் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட திறமை உள்ளவர். இந்திய அணியில் அவருக்கு நீண்ட எதிர்காலம் இருக்கிறது. தற்போது உள்ள அணியில் ப்ரித்வி ஷா தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் டென்னிஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் தகுதி பெறுவதுபோல், புஜாராவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்க ப்ரித்வி ஷா தகுதியானவர்’ என பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்