"அவர 2 'மேட்ச்' வெளிய உட்கார வைங்க.. அப்றம் பாருங்க என்ன ஆகுதுன்னு??.. 'இந்திய' வீரருக்கு எதிராக எழுந்த 'குரல்'.. பிரக்யான் 'ஓஜா' கொடுத்த 'ஐடியா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில் இதுவரை மூன்று போட்டிகள் ஆடியுள்ள நிலையில், மூன்றிலுமே தோல்வி கண்டுள்ளது.

மூன்று போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில், தொடக்க ஜோடி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தாலும், அதன் பிறகு வரும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாத காரணத்தால், அந்த அணி தோல்வியடைந்து வருகிறது. நேற்று மும்பை அணிக்கு எதிராக போட்டியிலும் கூட, தொடக்க வீரர் பேர்ஸ்டோ மற்றும் வார்னர் (Warner) ஆகியோர் சிறப்பாக ஆடினாலும், அதன் பிறகு வந்த வீரர் அடிக்க முடியாமல் திணறியதால், எளிய இலக்கை எட்ட முடியாமல் வீழ்ந்தது.

 

ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள மனிஷ் பாண்டே (Manish Pandey), தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், ஹைதராபாத் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில், அவர் 61 ரன்கள் அடித்தாலும் கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க தவறியதால், தோல்வி அடைந்தது. அதே போல, இரண்டாவது போட்டியில் 39 பந்துகளை எதிர்கொண்ட மனிஷ் பாண்டே, 38 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பி இருந்தார். நேற்றைய போட்டியில் அவர் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

இதனால், இனி வரும் போட்டிகளில் மனிஷ் பாண்டேவை வெளியே வைக்க வேண்டும் என்றும், ஹைதராபாத் அணி வேறு வீரரை மிடில் ஆர்டர் வரிசையில் களமிறக்க வேண்டும் என்றும் மனிஷ் பாண்டேவின் ஆட்டத்தை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மனிஷ் பாண்டே என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) கருத்து தெரிவித்துள்ளார்.

'மூன்றாவது வீரராக களமிறங்கி ஆடுவது என்பது சற்று கடினமான விஷயமாகும். ஒவ்வொரு ஆட்டத்திற்கு பிறகும், ஆட்டத்தின் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால், தற்போது மனிஷ் பாண்டேவின் ஆட்டத்தை பார்ப்பவர்கள், அவர் சிறப்பாக ஆடவில்லை என்றே கருதுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மனிஷ் பாண்டே அடுத்த இரண்டு போட்டிகளில் களமிறங்காமல், ஓய்வு எடுக்க வேண்டும்.

ஒரு வீரர் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கும் போது, சிறப்பாக ஆடவில்லை என்றால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. இதனால் இரு இடைவெளியை எடுத்துக் கொண்டு பிறகு ஆடுவது நல்லது' என மனிஷ் பாண்டேவிற்கு பிரக்யான் ஓஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக, சில போட்டிகளில் கேதார் ஜாதவை களமிறக்க வேண்டும் என்றும், அவரது அனுபவம் நிச்சயம் ஹைதராபாத் அணிக்கு கை கொடுக்கும் என்றும், ஓஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்