VIDEO: ‘தம்பி அவர்கிட்ட வச்சிக்காதீங்க’.. வான்டடா வந்து ‘வம்பிழுத்த’ கொல்கத்தா இளம் வீரர்.. பொல்லார்டு கொடுத்த தரமான பதிலடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டிடம் கொல்கத்தா இளம் வேகப்பந்து வீச்சாளர் வம்பிழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. அதிபட்சமாக டி காக் 55 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 33 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை லோக்கி பெர்குசன் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சுனில் நரேன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் ஓவரில் போல்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மும்பை அணியின் நட்சத்திய பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட்டின் ஓவர்களில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை அடித்து விளாசினார். இதனால் 30 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை (53 ரன்கள்) வெங்கடேஷ் ஐயர் பதிவு செய்தார். அதேபோல் ராகுல் திரிபாதியும் (74* ரன்கள்) அதிரடி காட்ட, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இப்போட்டியின் இடையே மும்பை ஆல்ரவுண்டர் பொல்லார்டுக்கும் (Pollard), கொல்கத்தா இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவுக்கு (Prasidh Krishna) இடையே உரசல் ஏற்பட்டது. அதில், போட்டியின் 15-வது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு, லேசாக தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால் உடனே பந்தை தடுத்த பிரஷித் கிருஷ்ணா, அதை பிடிக்க முயன்று தவறவிட்டார்.

அப்போது ஸ்டம்பை பார்த்து பந்தை எரிவது போல், பொல்லார்டை நோக்கி கையை காட்டியபடியே பிரஷித் கிருஷ்ணா சென்றார். இதனால் அதிருப்தி அடைந்த பொல்லார்டு அவரை பார்த்து கோபமாக ஏதோ சொல்லிவிட்டு சென்றார்.

இதனை அடுத்து பிரஷித் கிருஷ்ணா வீசிய 17-வது ஓவரில் சிக்சர், பவுண்டரி என பொல்லார்டு விளாசினார். இதனால் சற்று கோபமாக பிரஷித் கிருஷ்ணா தொடர்ந்து வொய்ட் பாலாக வீசினார். இதனை அடுத்து கேப்டன் இயான் மோர்கன் அவருக்கு சில அறிவுரை வழங்கினார். அந்த ஓவரில் மட்டும் 1 நோ பால், 2 வொய்ட், 1 பவுண்டரி மற்றும் சிக்சர் சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்