‘24 வயசுலயும் சரி இப்பவும் சரி, அதுக்கு மட்டும் உத்தரவாதம் கொடுக்கவே முடியாது’!.. வெளிப்படையாக பேசிய ‘தல’ தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இத்தனை வயதிலும் ஃபிட்டாக இருப்பதற்கான காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி சூப்பர் பதில் அளித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 10 ரன்னில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலியுடன் டு பிளசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி கிடைக்கின்ற கேப்பில் சிக்சர், பவுண்டரி என விளாசிக் கொண்டே இருந்தது. இதில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த டு பிளசிஸ், கிறிஸ் மோரிஸ் ஓவரில் ரியான் பராக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார்.

இதனை அடுத்து வந்த ‘சின்ன தல’ ரெய்னா 18 ரன்களில் வெளியேற, அடுத்ததாக அம்பட்டி ராயுடு களமிறங்கினார். இவர் மின்னல் போல 17 பந்துகளில் 27 ரன்கள் (3 சிக்சர்) விளாசிவிட்டு அவுட்டாகினார். அடுத்து வந்த ஜடேஜா 8 ரன்னில் அவுட்டாக, 7-வது வீரராக கேப்டன் தோனி களமிறங்கினார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, இளம் பவுலர் சக்காரியாவின் ஓவரில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து தோனி பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து களமிறங்கிய சாம் கர்ரன், தான் எதிர்கொண்ட 2-வது பந்தே சிக்சர் விளாசி மிரட்டினார். 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி அவரும் வெளியேறினார்.

இதில் முக்கியமாக ஆல்ரவுண்டர் பிராவோ (8 பந்துகளில் 20 ரன்கள்), கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி சிக்சர் (1), பவுண்டரிகளை (2) விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது.

இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் துரத்தியது. ஆனால் ஆரம்பத்திலேயே மனன் வோஹ்ரா (14), கேப்டன் சஞ்சு சாம்சன் (1) மற்றும் சிவம் துபே (17) அடுத்தடுத்து அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேவிட் மில்லர் (2) அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொயின் அலியின் ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து ரியான் பராக்கும், மொயின் அலியின் ஓவரி அவுட்டாகி வெளியேறினார். அப்போது களமிறங்கிய ராகுல் திவேட்டியா திடீரென அதிரடி காட்ட ஆரம்பித்தார். இந்த சமயத்தில் ஆல்ரவுண்டர் பிராவோவை ஓவர் போடுவதற்கு கேப்டன் தோனி அழைத்தார். அந்த ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ராகுல் திவேட்டியா வெளியேறினார்.

தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கு கடைசி நம்பிக்கையாக இருந்த கிறிஸ் மோரிஸ் களமிறங்கினார். இவர் முன்னதாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், கடைசி கட்டத்தில் களமிறங்கி 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதனால் இவரது விக்கெட்டை எடுப்பது முக்கியம் என சிஎஸ்கே அணி எண்ணியது. அதன்படி மொயின் அலியின் ஓவரில் சிக்சர் விளாச நினைத்த கிறிஸ் மோரிஸ், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்தது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், பவர் ப்ளே ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளருக்கு (சாம் கர்ரன், தீபக் சாகர்) மட்டுமே ஓவர் கொடுத்ததற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த தோனி, ‘இது அனைத்து போட்டிகளிலும் பண்ண முடியாது. அந்த நேரத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்து எடுக்கும் முடிவுதான். இன்னைக்கு அது கொஞ்சம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. அதில் சாம் கர்ரன் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் தீபக் சாகர் நிறைய நக்குல் பால் போட்டார். இங்கு அது எடுபடாது என அவருக்கு தெரியவில்லை. அது மட்டும் பிரச்சனையாக இருந்தது, மற்றபடி எல்லாம் சிறப்பாக அமைந்தது.

இப்படி செய்வதற்கு காரணம் என்னவென்றால், இந்த வீரர்கள் நாளைக்கு பெரிய பெரிய போட்டிகளில் விளையாடும் போது, தொடர்ந்து 2-3 ஓவர்களை வீசி வேண்டுமென்றால், அதற்கு இப்போதே பழக்கப்படுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் இப்படி செய்தேன்’ என தோனி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசி அவர், ‘இன்று நான்கூட முதல் 6 டாட் பால் ஆடிவிட்டேன். நான் மட்டும் டாட் பால்ஸ் கொஞ்சம் குறைவாக ஆடியிருந்தால், அணிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். 200 ரன்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்த்தேன், ஆனால் முடியாமல் போய்விட்டது. இது மட்டும் முக்கியமான போட்டியாக இருந்திருந்தால், நான் ஆடிய டாட் பால்ஸ், அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இதை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்’ என தோனி வெளிப்படையாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்னும் எப்படி ஃபிட்டாவே இருக்கிறீர்கள்? என தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அவர், ‘வயசாகிக் கொண்டே இருக்கிறது, அதேவேளையில் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், நாளைக்கு யாரும் நான் ஃபிட்டாக இல்லை என்று கேள்வி கேட்டுவிடக்கூடாது.

என்னுடைய விளையாட்டுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. நான் 24 வயதாக இருக்கும்போதும் சரி, தற்போது 40 வயதாகிறது இப்போதும் அப்படிதான். ஆனால் ஃபிட்னஸ் என்பது கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். எங்களுடைய அணியில் இருக்கும் இளம்வீரர்களுடன் இணைந்து ஓட முயற்சிக்கிறேன். அதுதான் என்னுடைய ஃபிட்னஸ் ரகசியம் வேறொன்றுமில்லை’ என தோனி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்