திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘ஐபிஎல்’ தொடர்.. Star Sports வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு.. ‘செம’ குஷியில் முதலீட்டாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் (IPL 2021) தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்துவதாக பிசிசிஐ (BCCI) அறிவித்தது. இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம்? என பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.

ஐபிஎல் தொடர் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-க்கு சுமார் 2000 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ-ன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரில் முதலீடு செய்திருந்த நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் போர்ட்ஸ் 2018-2022-ம் ஆண்டு காலகட்டத்திற்கு கைப்பற்றியுள்ளது. 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.16,348 கோடிக்கு அந்நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு ரூ.54.5 கோடி வீதம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு மொத்தம் உள்ள 60 போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதனால் விளம்பரதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளுக்கான தொகையை மட்டும் முதலீட்டாளர்கள் கொடுத்தால் போதும் என்றும், மொத்த தொகையும் செலுத்த தேவை இல்லை என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐபிஎல் தொடர் மறுபடியும் தொடங்கும்போது முதலீட்டாளர்கள் தங்களது ஒப்பந்தத்தை போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால் வெளியேறிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முதலீட்டார்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அதேபோல் இணையதளம் மூலம் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில், 14 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்