‘என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி’... ‘அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும்’... ‘ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன பார்த்தீவ் பட்டேல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த பார்த்தீவ் அஜய் பட்டேலுக்கு, 35 வயது ஆகிறது. 17 வயதில் சர்வதேசப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக 2002 ஆம் ஆண்டு களமிறங்கினார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இளம் வயதிலேயே தனது திறமையை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்து இந்திய அணியில் இடம்பெற்ற இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை 90-களின் பின் பகுதியில் இருந்தே தொடங்கியது. யாரும் சரியாக அமையாத நிலையில் ராகுல் டிராவிட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும், இவர் விக்கெட் கீப்பிங் செய்து வந்தார். ஆனால் அவரால் சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை. இதனையடுத்து, பார்த்தீவ் பட்டேல் 2008, 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மீண்டும் இந்திய அணியில் சில போட்டிகளில் ஆடினார். ஆனால், அப்போதும் அவர் தன் பேட்டிங் பார்மை நிரூபிக்கவில்லை.

பார்த்தீவ் பட்டேலுக்கு பிறகு இந்திய அணியில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை மூலம் நிரந்தர இடம் பிடித்ததால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்து ஒரு சில தொடர்களில் பார்த்தீவ் பட்டேல் ஆடி வந்தாலும் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2018 ஆம் ஆண்டு விளையாடினார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இவருக்கு பெங்களூரு அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட வேண்டிய தருணம் வந்துவிட்டது. 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். 17 வயது சிறுவனை நம்பி இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ-க்கு எனது வாழ்வு முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். இத்தகைய வாழ்க்கையை கொடுத்த கிரிக்கெட் உலகிற்கு மிகவும் பண்புடன் இருப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் என்னை இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நம்பி வாய்ப்பளித்து வந்த குஜராத் கிரிக்கெட் அசோசியேசனுக்கு எனது நன்றிகளையும் பண்புகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நான் அணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என மனமுருகி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்திய அணிக்காக இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பார்த்திவ் படேல், இதுவரை 934 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 38 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் 194 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்திருக்கிறார்.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து வந்த பார்த்தீவ், 2016-17 ஆம் ஆண்டு சீசனில் ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்