‘இன்னும் ஒரு தடவை கூட பேட்டிங் வாய்ப்பு கிடைக்கல’.. ‘ரொம்ப பாவங்க அவரு’.. சூர்யகுமாருக்கு ஆதரவாக குரலெழுப்பிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குரல் எழுப்பியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 77 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 158 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 83 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 40 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் அணியில் எடுத்தும் பேட்டிங் வாய்ப்பு கொடுக்கப்படாமல் உள்ள சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து ESPNCricinfo சேனலுக்கு கம்பீர் அளித்த பேட்டியில், ‘சூர்யகுமார் யாதவைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துள்ளீர்கள்? சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமாரிடம் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? இந்த தொடரில் யாருக்கும் காயம் ஏற்படாது என நான் நம்புகிறேன். ஒருவேளை யாருக்காவது காயம் ஏற்பட்டால், 4 அல்லது 5-வது விளையாட யாரவது தேவைப்படுவார்கள். உதாரணமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மாற்றலாம்.

சூர்யகுமாருக்கு 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்து, அவர் எப்படி என்று பார்க்கணும். ஏற்கனவே 4-வது ஆர்டரில் பேக்-அப் வீரர் இருக்கிறார். நாம் சோதனை முயற்சி பற்றி பேசுகிறோம். ஆனால் இது வெறும் உலகக்கோப்பைக்கான சோதனை கிடையாது. ஏற்கனவே பல வருடமாக பார்த்த வீரரைதான் பார்க்கிறோம்’ என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 4-வது ஆர்டரில் களமிறங்கினார், அவர் எப்போது 3-வது ஆர்டரில்தான் களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வானனும் (Graeme Swann) சூர்யகுமாருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து Star Sports சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், ‘சூர்யகுமாருக்கு ஆதரவாக பெரிதாக குரல் எழுப்புவேன். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியும், அவருக்கு இன்னும் பேட்டிங் கிடைக்கவில்லை.

நான் பார்த்ததிலேயே மிகவும் கடினமான விஷயம் இதுதான். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ரோஹித் மற்றும் கே.எல்.ராகுல் அவர்களது ஃபார்முக்கு வர சில போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது’ என கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும் சூர்யகுமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சூர்யகுமார் யாதவுக்கு இது கடினமாகத் தோன்றும். ரோஹித் திரும்பி வந்ததால் அது கடினமாக உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எதாவது ஒரு போட்டியில் இடம்பெறுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என ஹர்ஷா போக்லே ட்வீட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்