‘அவர் இந்திய அணிக்கு கிடச்ச வரம்’!.. கொஞ்சம் அவரோட ‘ரெக்கார்ட்’-ஐ எடுத்துப் பாருங்க.. தமிழக வீரரை தாறுமாறாக புகழ்ந்த பும்ரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி ஆரம்பித்த நாளிலிருந்தே மழை பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்டது.

அதேபோல் நேற்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது. இது இப்படியே தொடர்ந்தால், இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதில் இந்திய தரப்பில் அஸ்வினும், இஷாந்த் ஷர்மாவும் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து பும்ரா புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து ICC வெளியிட்டுள்ள வீடியோவில், ‘அஸ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு அது நன்றாக புரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. உண்மையில் அவர் இந்திய அணிக்கு கிடைத்த வரம். இந்த போட்டியில் கூட முதல் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி காண்பித்தார். இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் நிச்சயம் சிறப்பாகவே செயல்படுவார் என நான் நம்புகிறேன்’ என பும்ரா கூறியுள்ளார்.

இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே, வலிமையான தொடக்கத்தை கொடுத்தனர். நீண்ட நேரமாக இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வந்தனர். அப்போது அஸ்வின் வீசிய 35-வது ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து டாம் லாதம் வெளியேறினார். இது போட்டிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து டெவன் கான்வேயும் இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்