"என் 'கிரிக்கெட்' வாழ்க்கையோட முதல் நாள்.. இவ்ளோ மோசமா மாறும்ன்னு கொஞ்சம் கூட நினைக்கல.." சர்ச்சையான 'ட்வீட்'கள்.. உடைந்தே போன 'இங்கிலாந்து' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களளும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். 

இந்த போட்டிக்காக, இந்திய அணி நேற்றிரவு இங்கிலாந்து கிளம்பிச் சென்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி, நேற்று ஆரம்பமான நிலையில், நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அறிமுக டெஸ்ட் வீரரான கான்வே, முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். அதே போல, மறுபக்கம் இங்கிலாந்து அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ராஸ் டெய்லர் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் ராபின்சன் வீழ்த்தியிருந்தார்.

முதல் நாளிலேயே, இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, கிரிக்கெட்  உலகில் தனது பயணத்தை சிறப்பாக ஆரம்பித்து புகழ் பெற்றாலும், தற்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்றிலும் அவர் சிக்கியுள்ளார். கடந்த 2012 மற்றும் பதிவு 2013 ஆம் ஆண்டுகளில், அவர் செய்திருந்த சில ட்வீட்கள், தற்போது அதிகம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் செய்திருந்த ட்வீட்டில், இனவெறி மற்றும் பாலியல் ரீதியிலான கருத்துக்களை வெளிப்படுத்தியது தான், தற்போது அவருக்கு வினையாக அமைந்துள்ளது. தனது கடந்த கால ட்வீட்களுக்காக ராபின்சன் தற்போது மன்னிப்பும் கேட்டுள்ளார். இது பற்றி பேசிய அவர், 'எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளான இன்று, அதன் மீது கரை படியும் வகையிலான, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த ட்வீட்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த கருத்துக்களுக்காக, நான் இப்போது வெட்கப்படுகிறேன்.

நான் ஒரு இனவெறியன் இல்லை என்பதையும், ஒரு 'Sexist' இல்லை என்பதை இங்கு நாம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். அந்த சமயத்தில், நான் சிந்தனை உணர்வுகள் இல்லாமல் இருந்து, அந்த மன நிலையில் நான் செய்த செயல்கள், நிச்சயம் மன்னிக்க முடியாதவை. எனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நான் எடுத்த விக்கெட்டுகளின் பெருமை பற்றி பேசுவதாய் இருந்திருக்க வேண்டும் ஆனால் கடந்த கால நடத்தை, எனது பெருமையைக் கெடுத்துவிட்டது.

கடந்த சில ஆண்டுகளில், கிரிக்கெட் பயணத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். நான் செய்த செயலால், மனம் புண்படுத்தப்பட்ட அனைவரிடமும், எனது அணி வீரர்களிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என ராபின்சன் தெரிவித்துள்ளார்.

அறிமுக வீரர் ராபின்சனின் சர்ச்சை செயலுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், கூடிய விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்