"நான் யாருக்கும் எதைவயும் நிரூபிக்க தேவையில்ல!".. பல நாள் மனக்குமுறலை... காட்டமாக வெளிப்படுத்திய ஹர்பஜன்!.. 'சிஎஸ்கே'விலிருந்து வெளியேறியது ஏன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தன்னுடைய வயதை குறிப்பிட்டு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சீசினில் கேகேஆர் அணிக்காக விளையாடவுள்ள இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், அணியின் குவாரன்டைனில் இணைந்துள்ளார். 40 வயதில் தான் ஆடுவது குறித்து அனைவரும் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடுவதற்கு முன்னதாக அணியிலிருந்து விலகினார் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். அந்த நேரத்தில் இந்தியாவில் கொரானாவின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் தன்னுடைய குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், இந்த ஆண்டு கேகேஆர் அணியில் இணைந்துள்ளார் ஹர்பஜன். அணியின் குவாரன்டைனில் பங்கேற்றுள்ள அவர், கடந்த சில மாதங்களாக போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதாகவும், முன்னதாக இதே அனுபவம் தனக்கு உள்ளதாகவும், அதனால் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று தன்னால் சிறப்பாக போட்டிகளில் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, தான் தன்னுடைய 40வது வயதில் தற்போது ஆடுவது குறித்து பலரும் கேள்விகள் எழுப்புவதாகவும், ஆனால் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தனக்கில்லை என்றும் ஹர்பஜன் மேலும் கூறியுள்ளார். கிரிக்கெட்டின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளவே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கிரிக்கெட்டை ஆட விரும்புவதாகவும், தனக்கு மன மகிழ்ச்சியை தரும்வரையில் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தான் எப்போதும் ஒரு இலக்கை குறிவைத்து செயல்படுவதாகவும், அதை எட்ட முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு முன்னதாகவே தன்னை தானே திட்டி தீர்த்துவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 1998ல் தனது முதல் டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணிக்காக தனது பயணத்தை துவக்கிய ஹர்பஜன் சிங், 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை குவித்துள்ளார். இந்நிலையில், தான் மீண்டும் 20 வயதிற்கு செல்ல முடியாது என்றும், ஆனால் இந்த வயதிற்கு தேவையான வெற்றியை அடைய தான் பிட்டாக உள்ளதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்