‘என்கிட்ட இப்படி கேட்கலாமா..?’ கோலியை கோபப்படுத்திய நிருபர்.. அப்படி என்ன ‘கேள்வி’ கேட்டார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோலி கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று (25.08.2021) லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, ‘முதல் டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டம் நடைபெறாமல் போனதால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். வெற்றிக்கு 150 ரன்களே தேவை இருந்ததால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். 2-வது டெஸ்ட் போட்டியிலும் இதே மனநிலையுடன்தான் விளையாடினோம்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் மாற்றங்கள் திருப்தி அளித்தன. நம்மை உணர்வு ரீதியாக சீண்டினால் நிச்சயம் பின்வாங்க மாட்டோம் என்பதை நிரூபித்தோம். ஒன்றாக இணைந்து வெற்றிக்காகவே ஆடுவோம். எந்த எதிரணியும் எங்களை எளிதாக எடைபோட அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கும் தெரியும், நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தேடிப்பிடித்து ஆடுவோம் என்று’ என கோலி கூறினார்.

அப்போது நிருபர் ஒருவர், இங்கிலாந்தில் முக்கிய வீரர்கள் இல்லாத இந்த தருணத்தில் அந்த அணியை வெல்வது சுலபம்தான் இல்லையா? எனக் கிண்டல் செய்யும் விதமாக கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த கோலி, ‘முக்கிய வீரர்கள் எந்த அணியில் ஆடினாலும் எங்களால் வீழ்த்த முடியும். எதிரணியினர் பலவீனமாக இருப்பதை எப்போதும் நாங்கள் விரும்புவதில்லை. சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டு, என்னிடம் இப்படி கேள்வி கேட்பது சரியானது அல்ல’ என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தற்போதைக்கு அணியை மாற்றும் எண்ணமில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வெற்றி கூட்டணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. லார்ட்ஸ் வெற்றிக்கு பின் வீரர்கள் உற்சாகத்துடனும், துடிப்புடனும் இருக்கின்றனர். அதனால் அணியை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்’ என கோலி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்