‘சந்தேகமே வேண்டாம்’!.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின் ஹைதராபாத் அணியின் இளம்வீரர் ஒருவர் குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சுலபமாக வெல்ல வேண்டிய போட்டியை ஹைதராபாத் அணி தோற்றது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ர இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாஹா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.

அப்போது சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கைல் ஜேமீசன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். ஆனாலும், மறுமுனையில் மணிஷ் பாண்டே நிலைத்து நின்று விளையாடி வந்ததால், ஹைதராபாத் அணி எப்படியும் வெற்றி  பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிஷ் பாண்டே செய்த ஒரு சிறிய தவறு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

பெங்களூரு அணியின் ஷாபாஸ் அகமது வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தில், ஆஃப் திசையில் வந்த பந்தை தவறான முறையில் கட்டர் ஷாட் அடிக்க முயன்று மணிஷ் பாண்டே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ‘ஹைதராபாத் அணி தற்போது கேன் வில்லியம்சன் குறித்து யோசித்து பார்ப்பார்கள். இதுபோன்ற கடினமான போட்டிகளில் அவருடைய மதிப்பே வேறு. போட்டியை வென்று கொடுக்க ஒரு நிலையான வீரர் தேவை. அந்தவகையில் எனக்கு தெரிந்து மணிஷ் பாண்டே இனி ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் 11-ல் இடம் பெறமாட்டார். அதை அனைவரும் பார்ப்பீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும், மணிஷ் பாண்டே குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘கடைசி வீரர்களாக களமிறங்குபவர்கள் தான் பதற்றத்தில் மிட் விக்கெட், லாங் ஆன் திசையில் பந்தை அடிக்க முயற்சிப்பார்கள். மணிஷ் பாண்டே நல்ல பார்மில்தான் இருந்தார். ஆனால் மோசமான ஒரு ஷாட்டை அடித்து அவர் அவுட்டாகியுள்ளார். இப்படியே தொடர்ந்து விளையாடினால் இந்திய அணியிலும் சரி, ஹைதராபாத் அணியிலும் சரி அவர் இடம்பிடிக்கவே முடியாது’ என சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்