VIDEO: ஐயய்யோ.. இப்படி உடைச்சிட்டாரே..! அதோட விலை எவ்ளோ இருக்குமோ..? ஐபிஎல் மேட்சில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் அடித்த பந்து பவுண்டரில் லைனில் வைக்கப்பட்டிருந்த கேமராவின் லென்ஸை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 49-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாஹா களமிறங்கினர். இதில் சாஹா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். இதனை அடுத்து ஜேசன் ராயும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ப்ரியம் கார்க் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது கேன் வில்லியம்சன் ரன் அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ப்ரியம் கார்க்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்தது. இந்த சமயத்தில் களமிறங்கிய அப்துல் சமத் 18 பந்துகளில் 25 ரன்கள் (3 சிக்சர்) அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா (Nitish Rana) அடித்த பந்து ஒன்று கேமராவின் லென்ஸை (Camera lens) உடைத்தது. அதில், ஜேசன் ஹோல்டர் (Jason Holder) வீசிய 18-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ராணா, அதை பவுண்டரிக்கு விளாசினார்.

அப்போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ரஷித் கான், பந்தை தடுக்க ஓடினார். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டிச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த கேமாராவின் லென்ஸில் அடித்தது. இதனால் அந்த லென்ஸின் கண்ணாடி நொறுங்கிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்