அஸ்வின் விளையாடாததுக்கு இதுதான் காரணமா..? குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்.. கிளம்பும் புதிய சர்ச்சை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 4 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் ஜடேஜா மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் ஒன்றில் கூட அஸ்வின் இடம்பெறவில்லை. முன்னதாக லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவதாக இருந்தது. ஆனால் திடீரென மழை பெய்ததால், அணி நிர்வாகம் அவர் விளையாடவில்லை என தெரிவித்தது. கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட இந்த முடிவால் அஸ்வின் அதிருப்தி அடைந்தார்.

இதனை அடுத்து தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை. இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இங்கிலாந்து அணி 4 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது. இவர்களுக்கு எதிராக ஜடேஜா நன்றாக பந்து வீசுவார் என்பதால் அவர் இடம்பெற்றுள்ளார்’ என பதிலளித்தார்.

விராட் கோலியின் இந்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் (Nick Compton) அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அஸ்வின் உடனான தனிப்பட்ட பிரச்சனையை எப்படி அணி தேர்வில் கோலி வெளிப்படுத்தலாம்? இதை யாராவது விளக்குங்கள்’ என நிக் காம்ப்டன் பதிவிட்டுள்ளார்.

இதனால் விராட் கோலி-அஸ்வின் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்