‘தப்புக் கணக்கு போட்டுட்டேன்’.. இந்தியா ஜெயிக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டு ‘பல்டி’ அடித்த கிரிக்கெட் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா தோல்வியடையும் என தப்புக் கணக்கு போட்டுவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் முதலில் இந்திய அணி வெற்றி பெறும் என பலரும் கருதவில்லை. அதற்கு காரணம் முதல் இன்னிங்ஸின் முதல் நாளில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் (57 ரன்கள்) இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அதனால் இந்திய அணி 191 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்களை எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 466 ரன்களை குவித்து அதிரடி காட்டியது. இதை இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் (Nick Compton) இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘வெல்டன் இந்தியா, சிறந்த விடாமுயற்சி மற்றும் அணுகுமுறை. இந்த போட்டியை இங்கிலாந்து டிரா செய்யும் என நான் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது, இப்போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 52 சதவீதமும், இந்தியாவுக்கு 48 சதவீதமும் வாய்ப்புள்ளதாக நிக் காம்ப்டன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்