இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் என் ‘கடைசி’ போட்டி.. ரசிகர்களுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த நியூஸிலாந்து வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூஸிலாந்து வீரர் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்ப்டன் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோத உள்ளன. இதற்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பிஜெ வாட்லிங் (BJ Watling) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘நான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். நியூஸிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதை மிகப்பெரிய கௌரமாக எண்ணுகிறேன். வெள்ளை நிற உடை அணிந்து சக வீரர்களுடன் விளையாடியது என்னுடைய வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத தருணமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின், நிச்சயமாக சில நல்ல தருணங்களை நான் இழப்பேன் என எனக்குத் தெரியும். குறிப்பாக ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு, கடைசி நாளின் மாலைப்பொழுதில் சக வீரர்களுடன் சேர்ந்து உணவு உண்பதை நிச்சயமாக நான் இழப்பேன்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இனிவரும் காலங்களில் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிடுவேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன். உலகத்தரம் வாய்ந்த பல வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர்களின் மூலமாக எனக்கு நிறைய உதவிகளும் கிடைத்துள்ளன. நான் எப்போதும் அதற்காக நன்றியுடையவனாக இருப்பேன்’ என பிஜெ வாட்லிங் கூறியுள்ளார்.

இவர் நியூஸிலாந்து அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3773 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 28 ஒருநாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த போட்டி என்பது, இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியாக பார்க்கப்படுகிறது. அப்போட்டியில் பிரெண்டம் மெக்கல்லமுடன் ஜோடி சேர்ந்து 124 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் நியூஸிலாந்து அணியை தோல்வியிலிருந்தும் காப்பாற்றினார்.

தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஜெ வாட்லிங் திடீரென ஓய்வு முடிவை தெரிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்