‘சொன்ன மாதிரியே WTC Final-ல ஜெயிச்சாச்சு’!.. அடுத்த என்ன கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? நியூஸிலாந்து வீரர் எடுத்த முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து நியூஸிலாந்து மூத்த வீரர் ஒருவர் ஓய்வு குறித்து முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடியது. அப்போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே ஆகிய இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 140 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய நியூஸிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர், ‘2019-ம் ஆண்டு எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதனை மறக்க இந்த வெற்றி எங்களுக்கு பெரிதும் உதவும். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எங்களுக்கு குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிதும் உற்சாகப்படுத்தினர். இந்த வெற்றி அவர்களுடன் இன்னும் நல்ல உறவுகளை தொடர கைகொடுக்கும். நியூஸிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் நாளில் இருந்தே வில்லியம்சனுடன் இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளோம். அதற்கான பரிசுதான் இப்போது உலக சாம்பியன்களாக மாறியிருக்கிறோம்’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நான் விளையாட தொடங்கிய ஆரம்ப காலத்தில் எங்களிடம் தரம் இருக்கவில்லை. ஆனால் ஓர் அணியாக ஒற்றுமையாக இருந்தோம். இப்போது தரமும், ஒற்றுமையும் ஒன்றாக இருப்பதால் வெற்றி வசமாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்களும் ஓர் காரணம். அவர்கள் எப்போதும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இப்போது நிச்சயம் இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்’ என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஓய்வு குறித்து பேசிய ராஸ் டெய்லர், ‘உண்மையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கு வந்துள்ளேன். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு தற்போது எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். நியூஸிலாந்துக்காக இன்னும் சில போட்டிகள் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என அவர் கூறியுள்ளார். முன்னதாக பேட்டி ஒன்றில் கூறிய ராஸ் டெய்லர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் ஓய்வு குறித்து யோசிப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்