‘நாங்க யாரும் விளையாடல’.. திடீரென போட்டியை நிறுத்திய நியூசிலாந்து.. அதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் இப்போ ‘ஹாட்’ டாபிக்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் நடைபெற இருந்த ஒருநாள் போட்டியை திடீரென நியூஸிலாந்து அணி நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இருந்தது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள தனியார் ஓட்டலில் நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று (17.09.2021) மதியம் 3 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.

இதுதொடர்பாக விளக்கமளித்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. எங்களது வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். கடைசி நேரத்தில் இப்படி கூறுவது தவறுதான். ஆனால் வீரர்களின் பாதுகாப்பதான் எங்களுக்கு முக்கியம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ‘உலகின் சிறந்த உளவுத்துறை எங்கள் நாட்டில் உள்ளது. அனைத்து நாட்டு அணிகளுக்கு வழங்கப்படும் உச்சகட்ட பாதுகாப்பை தான் நியூசிலாந்து அணிக்கும் வழங்கியுள்ளோம். ஆனால் அந்த அணி இதுபோல் அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த தொடரை தொடரவே பாகிஸ்தான் விரும்புகிறது’ என தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால்  சரமாரியாக சுட்டனர்.

இதில் இலங்கை வீரர்கள் பலருக்கு குண்டடி காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாகிஸ்தான் ராணுவம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இது அப்போது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பல்வேறு நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் 18 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடைசியாக 2002-ம் ஆண்டுதான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்