‘திடீரென டிரெண்டாகும் ரோஹித்’!.. எல்லாத்துக்கும் ‘காரணம்’ இதுதான்.. நெட்டிசன்கள் வைக்கும் ஒரு கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 185 ரன்களை குவித்தது. இதில் சூர்யகுமார் 57 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனை அடுத்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்று ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் ஜாஸ் பட்லர் 9 ரன்கள் எடுத்திருந்தபோது, புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த டேவிட் மிலன் 14 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

அப்போது ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் (40) அவுட்டாகினார். இந்த நிலையில் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இதில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் ஷகரின் ஓவரில் ஜானி பேர்ஸ்டோ அவுட்டாகினார்.

ஆனால் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். இந்த நெருக்கடியான சமயத்தில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி திடீரென வெளியேறினார். அதனால் கேப்டன்சி பொறுப்பை ரோஹித் ஷர்மா ஏற்றுக் கொண்டார். அப்போது 4 ஓவர்களுக்கு 46 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை பந்துவீச ரோஹித் ஷர்மா அழைத்தார். அவர் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் (4) வாசிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த இரு விக்கெட்டுகளும் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து கடைசி ஓவரையும் ஷர்துல் தாகூரே வீச, 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் டெத் ஓவர்களில் சிறப்பாக கேப்டன்சி செய்து ரோஹித் ஷர்மா அணியை வெற்றி பெற வைத்துள்ளார் என்றும், அதனால் அவரை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்