"நீங்க என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க??.. ஒரு 'மேட்ச்' வெச்சு முடிவு பண்றது எல்லாம் நல்லா இல்ல.. 'இந்திய' அணியை விமர்சித்த 'நெஹ்ரா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்திருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மட்டுமில்லாமல், அதன் பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் சேர்த்தே இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்து. இதனிடையே, இந்த தொடருக்காக சில இந்திய வீரர்கள் இடம்பெறாமல் போனதை, முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதில், இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா (Prithvi Shaw), கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார். இதன் முதல் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 0 மற்றும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதன் பிறகு, அவரை எந்த போட்டியிலும் இந்திய அணி களமிறக்கவில்லை. தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால், இதற்கிடையே நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில், மும்பை அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்திருந்தார். இருந்த போதும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில், பிரித்வி ஷாவிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா (Ashish Nehra) கேள்வி எழுப்பியுள்ளார். 'ஒரு வீரரின் திட்டங்கள் தோல்வி அடையும் போது, அதனை சரி செய்து கொள்ள சற்று கடினமாக தான் இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில், பிரித்வி ஷா களமிறங்கிய போது, அவர் ஒன்றும் 30 முதல் 40 டெஸ்ட் போட்டிகள் ஆடிய அனுபவ வீரராக இருக்கவில்லை.

நாம் ஒரு இளம் வீரரை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம். ஒரு டெஸ்ட் போட்டியின் அடிப்படையில், அவரை வெளியேற்றுவது என்பது மிகவும் கடினமான முடிவாகும். அந்த தொடரை இந்திய அணி வென்றது. ஆனாலும், ஒரு போட்டிக்காக தொடர்ந்து, பிரித்வி ஷாவை வெளியேற்றியிருக்க கூடாது. கடந்த ஆண்டில் இன்னும் நிறைய போட்டிகள் பிரித்வி ஷா ஆடியிருக்க வேண்டும்' என இந்திய கிரிக்கெட் அணியின் முடிவை நெஹ்ரா விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்