‘வெறித்தனமான வொர்க் அவுட்’!.. அந்த தொடருக்கு தான் தயாராகிறாரா நட்டு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் உடற்பயிற்சி செய்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் தோனி, ஏபிடிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த கவனம் பெற்றார். அந்த தொடரில் அதிக யாக்கர்கள் வீசிய வீரர் பெருமையையும் நடராஜன் பெற்றார்.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக நடராஜன் சென்றார். டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், முகமது ஷமி போன்ற வேகபந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதால், டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகமாகி விளையாட வாய்ப்பு அமைந்தது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடவே, அடுத்த நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் நடராஜன் இடம்பிடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடையில் நடராஜனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பாதியிலேயே தொடரில் இருந்து விலகினார். பின்னர் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சமீபத்தில் வெளியான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.

தற்போது நடராஜன் குணமடைந்து உடற்பயிற்சி செய்யும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் இடம்பெறாத மற்றொரு அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் இளம்வீரர்களை களமிறக்க உள்ளதாக கங்குலி தெரிவித்தார். தற்போது நடராஜன் உடல் நலம் தேறியுள்ளதால், இந்த தொடரில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்