VIDEO: ‘பர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியலனா’!.. நடராஜன் சொன்ன ஒரு பதில்.. விழுந்து விழுந்து சிரித்த அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நெட் பவுலராக வந்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து தமிழக வீரர் நடராஜன் விளக்கியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஹப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக லபுஷங்னே 108 ரன்களும், டிம் பெய்ன் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை நடராஜன், வாசிங்கடன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முன்னணி வீரர்கள் அடுத்தது அவுட்டான நிலையில், வாசிங்கடன் சுந்தர் (62) மற்றும் ஷர்துல் தாகூர் (67) ஆகிய இரு இளம்வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான வாசிங்கடன் சுந்தர் மற்றும் நடராஜன் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

போட்டி முடிந்தபின் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னணி வீரருமான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், மூன்று இளம்வீரர்களையும் பேட்டி எடுத்தார். அப்போது, ‘கூச்சப்பட்டு இண்டெர்வியூக்கு வரமாட்டேன்னு சொன்னவரை வழுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்துருக்கோம்’ என நடராஜனை பார்த்து விளையாட்டாக கூறிய அஸ்வின், ‘நெட் பவுலராக இருந்த நீங்க நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?’ என நடராஜனிடம் அஸ்வின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நடராஜன்  ‘ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நெட் பவுலராக இருந்து முடித்துவிட்டு செல்லலாம் என்றுதான் நினைத்தேன். வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப…ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என மகிழ்ச்சியோடு அவர் பதிலளித்தார்.

அப்போது ‘மிட்ஷெல் ஸ்டார்க்கை கம்ஃபர்ட்புல்லா நீதான் நல்ல ஆடுன’ என நடராஜனிடம் அஸ்வின் கூறியதும், கம்ஃபர்ட்புல்லா ஆடுனனா, ‘பர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியலனா’ என பேட்டிங் பிடித்த அனுபவம் குறித்து நடராஜன் கூறியதும் அனைவரும் சிரித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்