இந்த மாதிரி நேரத்துல ‘தல’ய ரொம்ப மிஸ் பண்றோம்.. நடராஜன் எடுத்த விக்கெட்டை ‘தவறவிட்ட’ கோலி.. கொஞ்சம் சீக்கிரமா கேட்டிருக்கலாம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிவியூ கேட்க தாமதமானதால் இந்திய அணி ஒரு விக்கெட் வாய்ப்பை தவறவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை தக்க வைத்தது. இந்தநிலையில் கடைசி டி20 போட்டி இன்று (08.12.2020) சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் அடித்தனர். இந்திய அணியை பொருத்தவரை வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆனாலும் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இப்போட்டியில் ஒரு ரிவியூ கேட்க தாமதமானதால் இந்திய அணி ஒரு விக்கெட் வாய்ப்பை தவறவிட்டது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ வேட் மற்றும் மேக்ஸ்வெல் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் அவர்களின் கூட்டணியை முறிக்க இந்திய அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த சமயத்தில் தமிழக வீரரான நடராஜனுக்கு கேப்டன் கோலி ஓவர் கொடுத்தார்.

அப்போது நடராஜன் வீசிய பந்து மேத்யூ வேட்டின் பேட்டில் பட்டுச் சென்றது. ஆனால் அதற்கு அம்பயர் எல்பிடபுள்யூ கொடுக்க வில்லை. உடனே DRS கேட்டு மூன்றாம் நடுவரின் முடிவுக்குச் சென்றிருந்தால் நடராஜனுக்கு ஒரு விக்கெட் கிடைத்திருக்கும். ஆனால் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் சமயோசிதமாக செயல்படாததால் நேரம் விரயமானது.

10 நொடிகளில் ரிவியூ கேட்டுவிட வேண்டும். ஆனால் கோலி ரிவியூ கேட்டபோது 15 நொடிகளைக் கடந்திருந்தது. மேலும் பெரிய ஸ்கிரினில் அந்த பந்து ரீப்ளே போடப்பட்டது. இதனால் DRS-க்கு அனுமதிக்க கூடாது என மேத்யூ வேட் தடுத்தார். இதை அம்பயர்கள் ஏற்றுக்கொண்டதால் DRS வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. அதனால் நடராஜனுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் பறிபோனது. மேத்யூ வேட்டின் விக்கெட் கிடைத்திருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் குறைந்திருக்கும், அதனால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் சரியாக கணிக்க தவறவிட்டார் என்றும், இதுபோன்ற சமயங்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்