‘அப்போ கண்கலங்கிட்டேன்’.. ‘அதை நான் எதிர்பாக்கவே இல்ல’.. ஆஸ்திரேலியா டூர் குறித்து மனம் திறந்த நடராஜன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிறந்த குழந்தையைப் பார்ப்பதை விட நாட்டுக்காக ஆடியதைதான் மிக பெருமையாகக் கருதுகிறேன் என நடராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்து சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து இன்று நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு உதவியாக அமைந்தது.

கடினமாக, உண்மையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. இந்திய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார். பெண் குழந்தை பிறந்த அதிர்ஷ்டம்தான் எனக்கு நல்லது நடக்கிறது என பாராட்டினார்.

ஒருநாள் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றிய போது விராட் கோலி அருகில் தான் நின்றேன். அப்போது அவர் கோப்பையை என் கையில் கொடுத்ததும் கண்கலங்கிவிட்டேன். அதை நான் எதிர்பாக்கவில்லை. பிறந்த குழந்தையைப் பார்ப்பதை விட நாட்டுக்காக ஆடியதைதான் மிக பெருமையாகக் கருதுகிறேன். சேலத்தில் இருந்து எதிர்காலத்தில் நிச்சயம் பல வீரர்கள் வருவார்கள்’ என நடராஜன் பெருமையாக தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்