‘இத்தனை வருசம் எனக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் நன்றி’!.. கண்கலங்க ஓய்வை அறிவித்த இந்திய விக்கெட் கீப்பர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான நமன் ஓஜா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கண்கலங்க அறிவித்தார்.

நமன் ஓஜா (37) கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போட்டிகளி்ல விளையாடியவர். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த நமன் ஓஜா 146 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 9,753 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள், 55 அரைசதங்கள் அடங்கும்.

கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகமாகி 2020ம் ஆண்டுவரை உள்நாட்டுப் போட்டிகளில் ஓஜா விளையாடினார். 143 ஏ போட்டிகளில் விளையாடிய ஓஜா 4,278 ரன்களும், 182 டி20 போட்டிகளில் விளையாடி 2,972 ரன்களும் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக மொத்தமாக 113 போட்டிகளில் நமன் ஓஜா விளையாடியுள்ளார்.

ரஞ்சிக் கோப்பையில் விக்கெட் கீப்பராக இருந்த நமன் ஓஜா 417 கேட்சுகளையும், 54 ஸ்டெம்பிங்குகளையும் செய்துள்ளார். இதுவரை ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் எந்த விக்கெட் கீப்பரும் இந்த அளவு டிஸ்மிஸல்கள் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு குறித்து பேட்டியளித்த நமன் ஓஜா, ‘சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு விதமான போட்டிகளைப் பார்த்துவிட்டேன். இனி நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நீண்ட கிரிக்கெட் பயணம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

நான் இந்த நிலைக்கு உயர்வதற்கும் என் தேசத்துக்கும், மாநிலத்துக்கும் விளையாடுவதற்கும் எனக்கு ஆதரவு அளித்த நண்பர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள், கேப்டன்கள், சக அணிவீரர்கள், குடும்பத்தினர், நலம்விரும்பிகள், பிசிசிஐ, மத்தியப்பிரதேச கிரி்க்கெட் வாரியம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ஐபிஎல் எங்களைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. இந்திய அணிக்குள் விளையாட முடியாவிட்டாலும், சர்வேத வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை அளித்தது. கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசரஸ் அணியில் இருந்தது நினைத்து பெருமைப்படுகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், உலகளவிலான டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாகவே இருக்கிறேன்.

இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தை, ஐபிஎல் மேலும் செழுமைப்படுத்தி இருக்கிறது. இளம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பொருளாதாரத் தேவையை நிறைவேற்றவும் ஐபிஎல் உதவுகிறது’ என கூறிய அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்