VIDEO: ‘இப்படி பார்த்துக்கிட்டே நின்னா என்ன அர்த்தம்’.. சட்டுபுட்டுன்னு ஒரு முடிவெடுங்க.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சண்டை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச பேட்ஸ்மேனும், ஜிம்பாப்வே பந்துவீச்சாளாரும் மைதானத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சைஃப் ஹாசன் மற்றும் ஷாட்மேன் இஸ்லாம் களமிறங்கினர். இதில் சைஃப் ஹாசன் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சாந்தோவும் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் மோமினுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 70 ரன்கள் எடுத்திருந்தபோது ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் நியாச்சியின் ஓவரில் மோமினுல் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் (11 ரன்கள்), ஷாகிப் அல் ஹசன் (3 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் லிட்டன் தாஸ் 95 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
இதனைத் தொடர்ந்து 10-வதாக களமிறங்கிய டாஸ்கின் அகமது உடன் ஜோடி சேர்ந்த மஹ்முதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை நீண்ட நேரமாக பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி திணறியது. இதில் டாஸ்கின் அகமது 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மஹ்முதுல்லா 150 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வங்கதேச அணி 468 ரன்களை குவித்தது.
இந்த நிலையில் இப்போட்டியின் 85-வது ஓவரை ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் முசரபானி வீசினார். அப்போது அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட டாஸ்கின் அகமது, அதை அடிக்காமல் விட்டுவிட்டார். அப்போது அவரது அருகில் வந்த முசரபானி, டாஸ்கின் அகமதுவிடம் ஏதோ கூற, இருவரும் நேருக்குநேராக முகத்தைப் பார்த்து சண்டையிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்