Video : "என்னங்க இப்டி எல்லாம் பேசியிருக்கீங்க??.." மைக்கில் பதிவான 'ஆடியோ'.. ஆக்ரோஷமாக பேசி சிக்கிய 'வங்கதேச' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரில் தற்போது ஆடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்றிருந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 246 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீம் (Mushfiqur Rahim), 125 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.


தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், பங்களாதேஷ் அணி DLS முறையில், 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது. இதனிடையே, போட்டிக்கு மத்தியில் முஷ்ஃபிகுர் ரஹீம் செய்த செயல் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பொதுவாக, விக்கெட் கீப்பரான முஷ்ஃபிகுர் ரஹீம், ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் போது, ஆக்ரோஷமான செயல்களையும், எதிரணி பேட்ஸ்மேன்கள் விரும்பாத வார்த்தைகளையும் பயன்படுத்துபவர். அப்படி ஒரு செயலைத் தான், அவர் தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்த சமயத்தில் செய்துள்ளார்.

இலங்கை வீரர்களான குணதிலகா மற்றும் நிசாங்கா ஆகியோர் பேட்டிங் செய்த போது, மெஹிதி ஹாசன் பந்து வீசினார். பந்தை எதிர்கொண்ட குணதிலகா, பந்தினை அருகே தட்டி வைக்க, பவுலர் மெஹிதி ஹாசன் அருகே பந்து சென்றது. ஆனால், மறுபுறம் நின்ற நிசாங்கா ரன் ஓடுவதற்காக கிரீஸை விட்டு வெளியே சென்றார்.  இதற்கு நடுவே, நிசாங்கா வழியே வந்ததால், கைக்கு வந்த பந்தை மெஹிதி ஹாசன் தவற விட்டார்.

 

மறுகணமே கீப்பர் நின்ற முஷ்ஃபிகுர் ரஹீம், மெஹிதி ஹாசனிடம், 'பேட்ஸ்மேன் உனது வழியில் குறுக்கே வந்தால், அவரைத் தரையில் தள்ளி விடு' என தெரிவித்தார். இது தொடர்பான ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்த நிலையில், முஷ்ஃபிகுர் ரஹீம் பேசுவது தொடர்பான வீடியோக்களை, நெட்டிசன்கள் அதிகம் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக, கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேனோ, அல்லது பவுலரோ  ஓடும் போது, சக வீரரை வேண்டுமென்றே தள்ளி விட்டால், சம்மந்தப்பட்ட நபருக்கு அபராதம் வரை விதிக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு செயலை தூண்டும் வகையில், முஷ்ஃபிகுர் ரஹீம் பேசியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்