‘தோனி அடிக்கடி சொன்ன ஒரு வார்த்தை’!.. அதை அப்படியே சொல்லி சிஎஸ்கே போட்ட ‘சூப்பர்’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி கூறிய ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு, சாம் கர்ரனுக்கு தோனி அறிவுரை கூறுவது போன்ற போட்டோ ஒன்றை சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்து நாள் மும்பை வான்கடே மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் இளம்வீரர் சாம் கர்ரன், மொயின் அலி உள்ளிட்ட வீரர்களும் சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் இணைந்துள்ளனர்.

இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், சாம் கர்ரன் 95 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் களமிறங்கும்போது 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 130 ரன்கள் அடித்தால்தான் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. மேலும் 7 ரன்கள் வித்தியாசத்தில்தான் இந்தியாவிடம் இங்கிலாந்து தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரின் போது தோனி அடிக்கடி கூறிய வார்த்தையை குறிப்பிட்டு, அவர் சாம் கர்ரனுக்கு அறிவுரை கூறுவது போன்ற போட்டோவை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அந்த சமயத்தில் மூத்த வீரர்கள் மற்றும் இளம்வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வந்ததால், செயல்முறை மிகவும் முக்கியம் (The process is important) என தோனி கூறினார். இதே வார்த்தையை குறிப்பிட்டு, ‘இதைத்தான் சிங்கத்தின் உத்வேகம் என்று நாம் அழைக்கிறோம்’ என சென்னை அணி பதிவிட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், சாம் கர்ரனின் ஆட்டத்தை தோனியுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியிருந்தார். அதில், ‘இந்த போட்டி குறித்து தோனியிடம் சாம் கர்ரன் நிச்சயம் பேசுவார் என்று நினைக்கிறேன். அந்த இடத்தில் தோனி களமிறங்கி இருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை அப்படியே நான் சாம் கர்ரனிடம் பார்த்தேன். தோனி போன்ற பக்குவம் உள்ள ஒரு வீரருடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்வதை நினைத்தால் பெருமையாக உள்ளது’ என பட்லர் கூறியிருந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்